அரிவாளால் வெட்டி பெண் படுகொலை.. கணவன் வெறிச்செயல்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!!
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவரே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (44). இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கௌரி (41). இந்த தம்பதிக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் விஜி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.
இதனால் கடந்த 30 ஆண்டுகளாக சின்னத்துரை - கௌரி தம்பதியினர் தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கினார்கள். மீதி பணத்தை கணவர் - மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.
மேலும் கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2-வது கிராசில் வீடு ஒன்றில் போகியத்திற்கு குடியேறினர். இதனிடையே கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருந்த பிரச்சினையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கௌரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை அரிவாளால் மனைவியின் கழுத்து, கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் கௌரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டில் கௌரி பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார், கௌரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சின்னத்துரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.