மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள்ளேயே பெண் ஊழியர் வெட்டி கொலை.. மதுரையில் தொடரும் கொடூரம்!

 

மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மர்ம நபரால் பெண் ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தின் முக்கியமான மருத்துவமனையாக மதுரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உள்ளது. இங்கு விபத்து, மூளை, நரம்பியல், இதய நோய் சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றன. அந்த மருத்துவமனையில் தான் தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அந்த மருத்துவமனையில் முத்துலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் இரவு நேரத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் அணிந்திருந்த தோடு உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருக்கும் நிலையில் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையை மறைக்க நகை திருடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பிரபல மருத்துவமனையில் பணியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.