திருமணமான ஒரு வாரத்தில் கணவரை பிரிந்த மனைவி.. முன்னாள் காதலனுடன் தொடர்பு.. அக்காவை கொடூர கொலை செய்த தம்பி!

 

திருமங்கலம் அருகே திருமணமான ஒரு வாரத்திலேயே கணவரை பிரிந்து வந்த நிலையில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர், கம்பி கட்டும் வேலை செய்து வந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தபோதும் இருவரும் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மகாலட்சுமிக்கு வேறொருவருடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணம் செய்து கொடுத்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி, தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

கணவரை விட்டு தாய் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, தனது முன்னாள் காதலன் சதீஷ்குமாருடன் அடிக்கடி போனில் பேசி தங்களது நட்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் தெரியவந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், தனது அக்கா மகாலட்சுமி மற்றும் அவரின் காதலன் சதீஷ்குமாரையும் கண்டித்தார். மேலும், கிராம மக்கள் பலரும் மகாலட்சுமி - சதீஷ்குமாரின் தொடர்பு குறித்து, பிரவீன் குமார் காது படவே தவறாக பேச ஆரம்பித்தனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

சம்பவத்தன்று கடும் ஆத்திரத்தில் இருந்த பிரவீன்குமார் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சதீஷ்குமாரை வழிமறித்தார். அப்போது, தான் எடுத்து வந்த மிளகாய்ப் பொடியை சதீஷ்குமாரின் கண்களில் தூவி அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினார். தொடர்ந்து கண்மூடித்தனமாக வெட்டியதில் சதீஷ்குமாரின் தலை துண்டானது. பின்னர், துண்டான தலையை அருகில் உள்ள நாடக மேடையில் வீசிவிட்டு சென்றார். மேலும், ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்கு சென்று தனது அக்கா மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தடுக்க வந்த தனது தாய் சின்ன பிடாரியின் கையையும் துண்டாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கூடக்கோவில் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கைதுண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பிரவீன் குமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில், கொலையாளி பிரவீன்குமார் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கு மேலும் 4 பேர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்களையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர் திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனுடன் பேசி வந்த தனது அக்காவையும், அவருடன் பழகியவரையும்  கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.