பணியில் தகுதி குறைவு... ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கழுத்து நெரித்து கொலை செய்த எஸ்.ஐ..! கம்பம் அருகே பரபரப்பு

 

கம்பம் அருகே கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து எஸ்.ஐ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பம் மெட்டு காலனியில் வசித்து வந்தவர் அமுதா. கடந்த வியாழன் (மார்ச் 2) காலையில் நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் அமுதாவின் மகள் ருத்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.‌ விரைந்து வந்த ருத்ரா மற்றும் உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், உடலில் ஆடைகள் இல்லாமல் அமுதா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.‌ 

இதையடுத்து உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி சம்பவ இடத்தை ஆய்வு செய்து பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார்.‌ இந்நிலையில் கம்பம் வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த அமுதா, ஜெயக்குமார் என்பவருடன் வசித்து வந்தார். கடலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் ஜெயக்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அமுதாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த ஜெயக்குமாரின் மனைவி தனது பிள்ளைகளுடன் தனியே வசிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஜெயக்குமாரும், அமுதாவும் கணவன் - மனைவி போல தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். மது போதையில் வீட்டிற்கு வரும் ஜெயக்குமார் அமுதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதோடு அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.‌

இதனால் பாதிக்கப்பட்ட அமுதா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஜெயக்குமார் கைதாகி சிறை சென்ற அவரை ஜாமீனில் அமுதா வெளியே கொண்டு வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமார், அமுதாவுடன் இணைந்து மீண்டும் வாழ்ந்து வந்தார்.‌

இதற்கிடையே ஜெயக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததால் அவர் கம்பம் போக்குவரத்து காவல் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2-ம் தேதியன்று இரவில் ஜெயக்குமாருக்கும் - அமுதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தான் சிறை சென்றதற்கும் பணியில் தகுதி குறைவு செய்யப்பட்டதற்கும் அமுதாதான் காரணம் என அவருடன் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அமுதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயக்குமார்தான் கொலை செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்த கம்பம் வடக்கு போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.