கிணறு வெட்டும் பணியின்போது 3 தொழிலாளர்கள் பலி.. விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் அருகே கிணறு வெட்டும் பணியின்போது 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அருங்குறுக்கை கிராம எல்லையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயலில் புதிய கிணறு வெட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஹரிகிருஷ்ணன் (40), பெரியகுறுக்கை கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் தணிகாசலம் (48), நெய்வனை கிராமத்தை சேர்ந்த தாஸ் மகன் முருகன் (38) உள்ளிட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு கிணறு வெட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் 12 மணி அளவில் ஹரிகிருஷ்ணன், தணிகாசலம், முருகன் ஆகிய 3 பேரும் கிணற்றையொட்டி ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதை பார்த்த ஒருவர், திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். இதை கேட்டு பதறிய அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
மேலும் திருவெண்ணெய்நல்லூர் போலீசாரும் நேரில் வந்து 3 தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், 3 பேரின் சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், பாறைகளை தகர்ப்பதற்காக வெடி வைத்தபோது, அது வெடித்து 3 பேரும் இறந்திருப்பதாகவும், சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடல்களை எடுக்க விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு போலீசார், 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர். இதயைடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஹரிகிருஷ்ணன், தணிகாசலம், முருகன் ஆகியோர் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.