ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மின் வேலியில் சிக்கி உயிரிழப்பு.. கொலையா? போலீசார் விசாரணை!

 

திருக்கோவிலூர் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவரது மனைவி அன்னபூரணி (52). இந்த தம்பதிக்கு சந்தோஷ்குமார் (30), ராஜேஷ் என 2 மகன்கள் உள்ளனர். இதில், ராஜேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். சந்தோஷ்குமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தினமும் ராஜேஷ் பெங்களூரில் இருந்து தனது தாய், தந்தையிடமும், அண்ணன் சந்தோஷ்குமாரிடம் செல்போனில் பேசி வருவது வழக்கம். அதன்படி ராஜேஷ் நேற்று போன் செய்து உள்ளார். அவர்கள் எடுக்காத காரணத்தால் சந்தேகமடைந்த ராஜேஷ் அவரது உறவினர்களிடம் சென்று பார்க்கும்படி தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் அன்னபூரணியை தேடி காடியார் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்ததால் காடியார் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்களது இருசக்கர வாகனம், காலணிகள், கரும்பு பயிருக்கான உரம், பூச்சி மருந்து தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அங்கே கிடந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடிப்பார்த்த போது ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமாரும் இறந்து அழுகிய நிலையில் ஒரு இடத்திலும், அன்னபூரணி மற்றொரு இடத்தில் அழுகிய நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட மருத்துவ அறிக்கையில் மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பக்கத்து நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, 3 பேரும் உயிரிழந்திருப்பது உறுதியானது. பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி என்பவரைப் பிடித்து விசாரித்த போது சட்டவிரோத மின்வேலி அமைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி நாவம்மாள், மகன் தாமரைச்செல்வன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.