ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்!

 

திருச்சி அருகே கடன் தொல்லையால் 2 குழந்தை மற்றும் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிர்த்திகா (32). இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாய் நந்தினி (11) என்ற மகளும் கோகுல்நாத் (14) என்ற மகனும் இருந்தனர்.

இதில் சாய் நந்தினி மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் கோகுல்நாத் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்திகா மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ரைஸ்மில் கூலி வேலைக்கு சென்று மீண்டும் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி, மகன் ,மகள் ஆகிய மூன்று பேரும் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடன் தொல்லை காரணமாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கீர்த்திகா தனது குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.