ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரித்து கொலை.. கடலூர் அருகே பயங்கரம்

 

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கமலீஸ்வரி (60). இவரது கணவர் சுரேஷ் குமார், கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மூத்த மகன் சுரேந்திர குமார் (42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐடி ஊழியரான இளைய மகன் சுதன் குமார் (40) ஐதராபாத்தில் வசிக்கிறார். இவரது மகன் நிஷாந்த் குமார் (10) பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் தங்கியுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுதன் குமார் காரமணிக்குப்பம் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து புகை நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. 

வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுதன் குமார், அவரது தாயார் கமலீஸ்வரி, அவரது மகன் நிஷாந்த் குமார் மூவரும் மூன்று அறைகளில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக்கிடந்துள்ளது. இதனால் யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்து சென்றது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இது கொலையாகத் தான் இருக்கும் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் கடலூர் எஸ்.பி.ராஜாராமன் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.