தூத்துக்குடி VAO கொலை வழக்கு.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

 

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் மர்மகும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கின்றனர். 

இதுதொடர்பான வழக்கு என்பது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே தான் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை தினமும் விசாரணை நடத்தி 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை என்பது தீவிரமானது. முறப்பநாடு போலீசார் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகை மீதான விசாரணை என்பது தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அதோடு அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.