இன்ஸ்டாகிராமில் காதல் வலை.. பெண்கள் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

 

கள்ளக்குறிச்சியில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை விரித்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர் கடந்த சில வருடங்களாகவே, இன்ஸ்டாகிராம் மூலமாக பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகளிடம், ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது. அப்படி தனிமையில் இருக்கும்போது, வீடியோக்களையும், போட்டோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்ததாக தெரிகிறது.

அந்த வீடியோக்களை, சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டியதுடன், அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக சொல்லி பயமுறுத்தி வந்துள்ளார். இதற்கு பயந்தே பல பெண்கள், பணத்தை அருண் பிரசாத்துக்கு கொடுத்துள்ளனர். அப்படித்தான், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம், பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சோகத்துடன் இருந்ததை பார்த்து, என்ன நேர்ந்தது என்று அவரது தாத்தா விசாரித்து இருக்கிறார். இதற்கு அந்த மாணவி, அருண்பிரசாத் என்கிற இளைஞர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டும் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே அருண்பிரசாத் வீட்டிற்கு சென்ற தாத்தா, அவரை பிடித்து நியாயம் கேட்க, மலுப்பலாக பதில் அளித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தாத்தா, அருண் பிரசாத் செல்போனை பறித்தார். பின்னர், அதில் தனது பேத்தி உட்பட பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அந்த செல்போனை சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாத்தா புகார் செய்தார். அருண்பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. 10-ம் வகுப்பு வரை படித்து இருக்கும் அருண்பிரசாத், இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போடுவதை வழக்கமாக கொண்டவர். ‘நமக்கென்ன ராஜா மாதிரி இருக்கோம்’ என்ற வசனத்துடன் டிப்டாப் உடை, கழுத்தில் ஐ.டி. கார்டு, காலில் ஷூ என பார்ப்பவர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், பல ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் பெண்களை கவர்ந்துள்ளார் அருண்பிரசாத். இன்ஸ்டாகிராமில் தனது பகுதியை சேர்ந்த பெண்களை கண்டறிந்து, அவர்களிடம் ‘சாட்’ செய்து பேசி வந்துள்ளார். இனிக்க இனிக்க பேசி அவர்களில் சிலரை தனது காதல் வலையில் வீழ்த்தியும் உள்ளார். குறிப்பாக வீடியோ காலில், பெண்களை தன்னுடன் பேச வைத்து, அவர்களது ஆடைகளை களைய செய்துள்ளார்.

அப்போது அவர்களுக்கே தெரியாமல் அதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சில பெண்கள் தங்களது ஆபாச படங்களை அவர்களாகவே அருண் பிரசாத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி நகை, பணத்தை பறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். ஒரு சில பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர் விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அருண்பிரசாத்தை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். அருண்பிரசாத்தின் தாய் சவுதியில் வசித்து வருவதால், அருண் பிரசாத்தும் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்காக அருண் பிரசாத் சென்னைக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காதல் பெயரில் வலை விரித்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அருண் பிரசாத்தை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.