தலைமறைவு ஆன மகன்கள்.. பாடகர் மனோவின் மகன்களை, கும்பல் தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகள்!

 

பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகளால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20), தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள காலபந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீசில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 6 பேரில் இருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி மனோ மற்றும் ரிதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து  மனோவின் மகன்கள் ரிதீஷ், ரஃபி மற்றும் வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மனோவின் மகன்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.