வீட்டிற்கு அழைத்த நர்ஸ்.. சந்தர்ப்பத்தை சாதகமாக்கிய காதலன்.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு வேலை பார்த்து வந்தார். இவருக்கு அக்கா ஒருவர் உள்ளார். இவரை சேத்தூர் பகுதியில் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. குழந்தையை கவனித்துக்கொள்ள நர்சான தன் தங்கையை அழைத்து சென்றுள்ளார். அவரும் சென்று அங்கு தங்கி இருந்து குழந்தையை கவனித்து வந்திருக்கிறார்.

இதனிடையே அவர் தங்கி இருந்த வீட்டுக்கு பக்கத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வந்துள்ளது. அங்கு கொத்தனாராக சேத்தூர் வலையர் காலனியைச் சேர்ந்த மலைக்கனி (28) வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அந்த நர்சுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடையில் காதலாகியது.

இந்த நிலையில் ஒரு நாள், வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது மலைக்கனியை அக்காள் வீட்டுக்கு அந்த நர்சு வரவழைத்து உள்ளார். அங்கு சென்ற மலைக்கனி, அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கடைக்கு அவசரம் அவசரமாக சென்று குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து நர்சிடம் குடிக்கக் கொடுத்துள்ளார். குடித்த சற்று நேரத்தில் நர்சு மயக்கம் அடைந்ததும், அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்ததாக கூறப்படுகிறது. 

சற்று நேரம் கழித்து நர்சு மயக்கம் தௌிந்து எழுந்தபோது, ஆடைகள் கலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, நான்தான் உன்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். எனவே நான் உன்னுடன் உறவு கொண்டேன் எனக்கூறி அந்த ஆபாச வீடியோவையும் அவரிடம் காண்பித்து உள்ளார். அந்த வீடியோவை அழித்துவிடுங்கள், என நர்சு கெஞ்சியுள்ளார். சில நாட்கள் கழித்து, என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என நர்சு கேட்டபோது, அவர் அலட்சியப்படுத்தியதுடன், நர்சின் அத்தை மகனுக்கு அந்த வீடியோவை அனுப்பி இருக்கிறார்.

இதை அறிந்த நர்சின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நர்சை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர்களும் மலைக்கனியை கேட்டபோது, மலைக்கனி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நர்சு, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைக்கனியை கைது செய்தனர்.