பள்ளிக்குள் புகுந்து சிறுவனை கொடூரமாக தாக்கிய மாணவியின் தந்தை.. மணப்பாறை அருகே பரபரப்பு!
மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் மாணவனை மது போதையில் மற்றொரு மாணவியின் தந்தை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. மேலும் அந்த பள்ளியில் அருளப்பன் என்பவரின் மகன் டார்வின் என்ற சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகின்றான். அப்போது தனது மகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான வின்சென்ட் ராஜ் என்பவரிடம் அந்த சிறுவன் மாணவியின் பெயரைக் கூறி நீங்கள் அவரது அப்பாவா என்று கேட்டுள்ளார்.
மது போதையில் இருந்த வின்சென்ட் ராஜ் பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவனை என் மகளின் பெயரை என்னிடமே கேள்வி கேட்கிறாயா என கோபமாக கேட்டு சிறுவனை அடித்தும் தகாத வார்த்தையால் திட்டியும் காலால் எட்டி உதைத்துள்ளார்.
அதனை கண்ட ஆசிரியர் விரைந்து வந்து அவரை தடுக்க முயற்சித்த நிலையிலும் அவர் சிறுவனை தாக்கியுள்ளார். பின்னர் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் டார்வின் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதனை தொடர்ந்து மாணவனின் தந்தை அருளப்பன் வையம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.