பெண் நோயாளியிடம் சில்மிஷம்.. அரசு மருத்துவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு!

 

சென்னையில் நோயாளிடம் சில்மிஷம் செய்ததாக ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் கோகுல கிருஷ்ணன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. தற்போது காப்பர் டி அணிந்திருப்பதால் ஏற்பட்ட வலியின் காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். இரண்டு 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி உள்ளார்கள். எனவே, மருத்துவமனை ஊழியர்களும் அந்த பெண்ணை ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த ரேடியாலஜி டாக்டர் கோகுல கிருஷ்ணன், அந்த பெண் நோயாளியிடம் பரிசோதனை என்ற பெயரில் டிரஸ்ஸை கழட்ட சொல்லியிருக்கிறார். மேலும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், டாக்டர் கோகுல கிருஷ்ணனை சரமாரி திட்டினார். அப்போதே அவரிடம் தகராறும் செய்துள்ளார்.

இந்த சத்தம் கேட்டதும், பெண் டாக்டர் ஒருவர் ஓடிவந்துள்ளார். ஆனால், அதற்குள் ஸ்கேன் சென்டரிலிருந்து கோகுல கிருஷ்ணன் அவசரம் அவசரமாக வெளியேறி விட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில், 3 பேர்‌ கொண்ட குழு அமைத்து, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில் விசாரணை குழு அளித்த பரிந்துரையின் பேரில், கதிரியக்கவியல் டாக்டர் கோகுல கிருஷ்ணனை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. டாக்டரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும், அவரது ஒரு மாத ஊதியத்தை வாங்கித்தருகிறோம், இந்த விஷயத்தை மட்டும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த பெண் நோயாளி, உடனடியாக தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் அத்தனையையும் புகாராக கொடுத்தார். இதையடுத்து, டாக்டர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.