அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை.. பொள்ளாச்சியில் பயங்கரம்!

 

பொள்ளாச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கெளரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் அலறல் சத்தம் இருந்த திசையை நோக்கி விரைந்து சென்றனர். குடியிருப்பில் இருந்த வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகாலிங்கபுரம் போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் சுஜய் (30) என்ற வாலிபர் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. சுஜய்க்கு திருமணமாகி ரேஷ்மா என்ற மனைவி உள்ளார். கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்த சுஜய் ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். சுஜய் மனைவி ரேஷ்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது.

சுஜய் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20) என்பது தெரியவந்துள்ளது. நேற்றிரவு சுப்புலட்சுமியை சுஜய் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சுப்புலட்சுமியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சுஜய் தலைமறைவாகிவிட்டார். 

இந்த சம்பவத்தில் சுஜய் கைது செய்யப்பட்ட பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த சுஜயை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் பாலக்காடு விரைந்துள்ளனர்.