ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்!
மகாராஷ்டிராவில் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சகிநகா பகுதியை சேர்ந்தவர் பஞ்சஷீலா ஜாமீதர் (30). இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் போர்ஸ் (33) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆரம்பக் கால கட்டத்தில் இவர்களுக்குள் இருந்த காதல் போக போக மோதலாக மாறியுள்ளது.
தீபக் போர்ஸ் ஓட்டுநராக பணி புரிவதால், பஞ்சஷீலா பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர், இதுகுறித்து இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கட்கோபர் பகுதியில் இருந்த பஞ்சஷீலாவை பார்ப்பதற்காக தீபக் போர்ஸ் சென்றுள்ளார்.
அங்கிருந்து இருவரும் பஞ்சஷீலா வசிக்கும் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது, ஆட்டோவில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த காதலன் தீபக் போர்ஸ், காதலி பஞ்சஷீலாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சஷீலா தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை பார்த்து பயந்த தீபக் போர்ஸ் அதே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தீபக்கை மடக்கி பிடித்த போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பஞ்சஷீலா மற்றும் தீபக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் பஞ்சஷீலா வரும் வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீபக்கிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போலீசார் தீபக்கின் மேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓடும் ஆட்டோவில் காதலியை கழுத்தை அறுத்து கொன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.