நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அடித்துக் கொன்ற 17 வயது மகன்.. வெளியான் அதிர்ச்சி உண்மை!

 

மானாமதுரை அருகே பெற்ற தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகண்ணன் (44). லாரி ஓட்டுநரான இவருக்கு புஷ்பலதா என்ற மனைவியும், தாரணி என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என 10 நாட்களுக்கு முன்பு, மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உதயகண்ணனை போலீசார் தேடி வந்த நிலையில், சீராம்பட்டி கிராம சாலை அருகே மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தது போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தபோது, உதயகண்ணனின் இருசக்கர வாகனம் ஒருபக்கம் விபத்தில் சிக்கியது போல் இருந்தாலும், மறுபக்கம் வாகனம் உடைத்தது போல் காணப்பட்டதால், போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயகண்ணனின் மனைவி புஷ்பலதா, மகள் தாரணி, மகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களைக் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து மூவரையும் தனித்தனியாக போலீசார் விசாரித்த போது குடும்பமே சேர்ந்து உதயகண்ணனை கொலை செய்தது தெரியவந்தது.

உதயகண்ணனுக்கு சொந்தமாக 2 லாரிகள் உள்ள நிலையில், அதற்கு சரியாக மாதத்தவணை கட்டாமல், தகாத உறவில் இருந்த பெண்ணிடம் வருமானத்தை அள்ளி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் பண நெருக்கடிக்கு ஆளான நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு உதயகண்ணன் வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், திடீரென மகனின் செல்போன் எண்ணை அழைத்து உதயகண்ணன் பேசியுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த 17 வயது மகன், தந்தையை பார்க்க வேண்டும் எனக்கூறி, இடைக்காட்டூர் சீராம்பட்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு, தனது நண்பர்களான லாடனேந்தல் சூர்யபிரகாஷ் (19), வீரமணிகண்டன் (19) ஆகியோரின் உதவியுடன் உதயகண்ணனை கொலை செய்தது, விசாரணையில் அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக, உதயக்கண்ணனின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக இறந்த உதய கண்ணனின் மனைவி புஷ்பலதா மற்றும் அவருடைய மூத்த மகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.