அத்தையிடம் அத்துமீறிய மருமகன்.. ஆசைக்கு இணங்காததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

 

கொடுங்கையூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை தம்பி மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகர் கண்ணன் தெருவில் வசித்து வருபவர் அன்பு (55). இவர் அதே பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வேளாங்கண்ணி (47). இந்த தம்பதிக்கு மரியம் லாரன்ஸ் என்ற மகனும் நான்சி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலையில் வழக்கம் போல் கணவர் அன்பு மற்றும் மகன், மகள், ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் வேளாங்கண்ணி மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவருடைய மகன் மரியம் லாரன்ஸ், தனது தாய் வேளாங்கண்ணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் வேளாங்கண்ணியின் நெருங்கிய உறவினர் வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அதே பகுதி லூயிஸ் மாதா தெருவில் வசிக்கும் வேளாங்கண்ணியின் தம்பி யுவராஜ் என்பவருடைய மகன் அகஸ்டின் அருண் (21) மற்றும் அவருடைய நண்பரான கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சாலமன் (22) ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காலை கைது செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பணத்தகராறில் வேளாங்கண்ணி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் திடீர் திருப்பமாக காமக் கொடூரனாக மாறிய அவருடைய தம்பி மகனே, சொந்த அத்தையை ஆசைக்கு இணங்காததால் கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கைதான அகஸ்டின் அருண், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு காம உணர்வு அதிகமானதால் நண்பர் சாலமனுடன், எனது அத்தை வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அத்தை மட்டும் தனியாக இருப்பதை அறிந்து கொண்டேன். எனது நண்பர் சாலமனை வெளியில் உட்கார வைத்துவிட்டு, நான் மட்டும் வீட்டுக்குள் சென்று அத்தையிடம் எனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், என்னுடைய தம்பி மகன் நீயே இப்படி நடந்து கொள்கிறாயே? என என்னை திட்டினார்.

ஆனாலும் நான் விடாமல் மீண்டும் அவரை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். அதற்கு மறுத்த வேளாங்கண்ணி, கூச்சல் போட்டார். இதனால் வெளியில் யாரிடமாவது சொல்லி விடுவாரோ? என பயந்து, எனது அத்தை வேளாங்கண்ணியின் தலை முடியை பிடித்து இழுத்து சுவர் மற்றும் தரையில் தலையை முட்டிக்கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நண்பருடன் தப்பிச்சென்று விட்டேன். ஆனாலும் போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

பின்னர் கைதான 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சொந்த அத்தையையே ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதுடன், அதற்கு மறுத்ததால் அவரை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.