ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான மகன்... ரூ. 3 லட்சம் கையாடல்... தலைமறைவால் தாய் எடுத்த விபரீத முடிவு!!

 

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கம்பெனி பணத்தை கையாடல் செய்த மகன் தலைமறைவானதால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி செல்வி (48). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் தேவேந்திரன் (22), கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் தேவேந்திரன் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேராசையில் தான் பணிபுரிந்து வரும் கம்பெனி பணம் ரூ,3 லட்சத்தை கையாடல் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். இதில் நஷ்டம் அடைந்ததால் அச்சமடைந்த தேவேந்திரன் வீட்டில் யாரிடம் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து திருடிய பணத்தை தேவேந்திரன் திருப்பி செலுத்தாததால் கம்பெனி நிர்வாகம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுவதாக கூடுவாஞ்சேரி போலீசில் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேவேந்திரன் தலைமறைவாகி விட்டதால் பணத்தை கட்டமுடியாமல் பெற்ரோர் தவித்து வந்ததாக தெரிகிறது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெய்யை ஊற்றி கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, செல்வி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், தீயில் கருகி பலியான செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.