தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை.. தாயின் காதலனிடம் போலீசார் விசாரணை!

 

சென்னையில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு ஒரு மகனும், தேஜஸ்வினி (6) என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தன்னுடன் வேலை செய்து வந்த சீனிவாசன் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக திவ்யா வீட்டில் சீனிவாசன் இருந்து வருகிறாராம். இந்நிலையில், திவ்யா நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். சீனிவாசன், 2 பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி தேஜஸ்வினியை மயங்கிய நிலையில் சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திவ்யாவின் மகன் புழல் போலீசாரிடம் கூறியதாவது, தாயார் திவ்யா வேலைக்கு சென்ற பிறகு சீனிவாசன், சிறுமியை அடித்தாராம். பின்னர், சிறுமியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கதவை அடைத்து கொண்டார்.

வெகு நேரமாக கதவு திறக்கப்படவில்லை. ஆனால், சிறுமி அழும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து குளியலறையில் இருந்து சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் சீனிவாசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.