குடியாத்தம் அருகே பள்ளி மாணவி மாயம்.. ரயில் தண்டாவளத்தில் சடலமாக மீட்பு!
குடியாத்தம் அருகே 15 வயது சிறுமி மாயமான நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பிரித்திங்கா (15). இவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்குச் செல்வதற்காக சக மாணவிகளிடம் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மதியமே வீட்டிற்குக் கிளம்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் புத்தகப்பை, செருப்பு ஆகியவை குருநாதபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே இருப்பதைக் கண்ட சிலர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்த குடியாத்தம் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது குடியாத்தம் மேல்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே பள்ளி சீருடையில் சிறுமி ஒருவரின் சடலம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது அது மாணவி பிரித்திங்கா என்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யும் நோக்கத்தோடு ரயிலில் தள்ளி விடப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.