பட்டியலின மாணவனுக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடூரம்.. திருச்சி கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

 

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர் பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 6-ம் தேதி, கல்லூரி வளாகத்தில் இறுதியாண்டு இளங்கலை சட்ட மாணவர்களின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, நண்பர்கள் 2 பேரும் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து பட்டியலின மாணவனை குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாள் நண்பர்கள் 2 பேரும் தன்னை கேலி செய்த போதுதான், குளிர்பானத்தில் சிறுநீர் கலக்கப்பட்டு இருந்ததை பட்டியலின மாணவன் அறிந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன், ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பட்டியலின மாணவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க, 3 உதவிப் பேராசிரியர்களைக் கொண்ட ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை ஜனவரி 18-ம் தேதி சமர்ப்பிக்கும் என்றும் அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

மாணவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது. இந்நிலையில், தனது நண்பர்கள் மீது தந்த புகாரை பட்டியலின மாணவன் திரும்ப பெற்று விட்டதாக பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.