கள்ளக்காதலை கண்டித்த உறவினர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வடமாநில பெண்!

 

சென்னையில் கள்ளக்காதலை கண்டித்த உறவினரை காதலனுடன் சேர்ந்து வடமாநில பெண் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியாக தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜகர் (38) என்பவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினரான சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோகன் புஜகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன் புஜகர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், யாரோ ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் இறந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மோகன் புஜகரின் உறவினரான சோனியா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஷாந்தா பர்மன் (44) ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சோனியாவுக்கும், அங்கு வேலை செய்து வந்த சுஷாந்தா பர்மனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை மோகன் புஜகர் கண்டித்தார். ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். சம்பவத்தன்று சுஷாந்தா பர்மன், சோனியா வீட்டுக்கு வந்து அவருக்கு வளையல் அணிவித்தார். இதை பார்த்த மோகன் புஜகர் அவருடன் வாக்குவாதம் செய்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த சுஷாந்தா பர்மன், கத்தியால் மோகன் புஜகர் மார்பில் குத்திக்கொலை செய்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மோகன் புஜகர், கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக இருவரும் நாடகமாடியதும் தெரிந்தது. இதையடுத்து சோனியா மற்றும் சுஷாந்தா பர்மன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.