கார் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி.. சிவகிரியில் பரபரப்பு!

 

சிவகிரியில் கார் மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூபாலன் (32). இவர் இருசக்கர மெக்கானிக் உள்ளார். இவரது மனைவி மோகன பிரியா (29). இந்த தம்பதிக்கு தமிழ் மாறன் (6) என்ற மகனும், தமிழினி என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயாள் (60). இவர் சிவகிரி ஜீவா தெருவில் பனியன் தைக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். விஜயாள் நேற்று காலை வேலைக்கு செல்லும் போது தமிழினியை அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் மதியம் விஜயாள் நிறுவனத்தில் உள்ளே வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தமிழினி நிறுவனத்தின் வாசலுக்கு வந்து நின்றார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக தமிழினி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு தமிழினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், தமிழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.