3 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை.. கந்துவட்டி டார்ச்சரால் நிகழந்த சோகம்!

 

குடியாத்தம் அருகே 3 குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலே செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து உள்ள சாமியார்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கட்டடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா (24). இந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தையும் 3 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக தினேஷ் அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் 10 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்குக் கடனாக வாங்கியுள்ளார். அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை 10 ரூபாய் வட்டி என  வாங்கியுள்ளார்.

இதனிடையே, வட்டியுடன் மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடன் கொடுத்த மாலதி கூறியுள்ளார். அதில் 30 ஆயிரம் பணத்தை தினேஷ் செலுத்தியுள்ளார். ஆனால், பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தர சொல்லி மாலதி அவதூறாக பேசி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாலதியை கைது செய்ய கோரி தினேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.