ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. தவறி விழுந்த இளம்பெண் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!

 

சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற இளம்பெண் பிரீத்தி தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கந்தன்சாவடி திருவிக தெருவில் வசித்து வருபவர் சசிகுமார். இவரது மகள் ப்ரீத்தி (23). இவர் பி.காம் முடித்துவிட்டு கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் சேல்ஸ் கேர்ளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி மின்சார ரயில் மூலமாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 2 இளைஞர்கள் இவரது செல்போனை பறித்து தப்பி ஓடி உள்ளனர். செல்போன் பறிக்கும் போது இளம் பெண்ணை இழுத்ததால் அவர் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அந்தப் பெண் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த பிரீத்தியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனைக்கு பிரீத்தி அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இளம்பெண் ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே ப்ரீத்தியின் செல்போன் காணவில்லை எனவும் செல்போன் பறிக்கும்போது ப்ரீத்தி தவறி விழுந்து உயிர் இழந்திருக்க கூடும் என ப்ரீத்தியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த வியாபாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஒரு நபர் அந்த நேரத்தில் வேகமாக வெளியே ஓடியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் ப்ரீத்தியின் செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போது, பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் செல்போன் இருப்பதை போலீசார் கண்டறிந்து அவரை பிடித்தனர். அவர் அளித்த தகவலின் பெயரில் மற்றொரு நபரான மணிமாறன் என்பவரையும் போலீசார் பிடித்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 2ம் தேதி வழக்கம் போல் பிரீத்தி பணியை முடித்துவிட்டு பறக்கும் ரயிலில் பயணித்ததும், அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அடைந்தவுடன், ப்ரீத்தி அடுத்த ஸ்டாப்பில் இறங்குவதற்காக ரயிலின் வாசலில் வந்து நின்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பும்போது, ரயிலில் தயாராக நின்று கொண்டிருந்த மணிமாறன் திடீரென ப்ரீத்தியின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

அப்போது நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்த பிரீத்திக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளியே இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த விக்னேஷ் என்பவருடன் மணிமாறன் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் செல்போன் பறிக்கும்போது ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்து என்ற பிரிவை திருவான்மியூர் ரயில்வே போலீசார் மாற்றி கொலை குற்றம் ஆகாத மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.