காதல் மனைவியை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவர்.. கேரளாவில் நடந்தது என்ன?

 

கேரளாவில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கணவனே தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம்ஜி சந்திரன் (36). இவரும் பட்டணக்காடு பகுதியைச் சேர்ந்த ஆரதி (32) என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இஷானி, ஷியா என 2 குழந்தைகள் உள்ளனர். ஆரதி சேர்த்தலாவில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சேர்த்தலா தாலுகா மருத்துவமனை அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஆரதியை அவரது கணவர் ஷியாம்ஜி சந்திரன் வழிமறித்து தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார். பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி ஆரதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ எரிந்த நிலையில் அலறி துடித்தபடி சுமார் 100 மீட்டர் தூரம் ஓடியுள்ளார் ஆரதி. அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

உடனடியாக போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஆரதி சேர்த்தலா தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மதியம் ஆரதி உயிரிழந்தார். இதில் ஷியாம்ஜி சந்திரனுக்கும் தீ காயம் ஏற்பட்டது. அவருக்கு ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ஆரதி பெயரில் உள்ள நிலத்தை விற்பதற்காக ஷியாம்ஜி சந்திரன் முயன்றார். இதனால் இதுவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ஆரதிக்கு போனிலும், நேரிலும் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார் ஷியாம்ஜி சந்திரன். இதுகுறித்து ஆரதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருமுறை ஷியாம்ஜி சந்திரன் காவல் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பப்பட்டார். ஆனாலும், மிரட்டல் தொடர்ந்ததை அடுத்து மீண்டும் ஆரதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஷியாம்ஜி சந்திரன் அப்போது கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த ஷியாம்ஜி சந்திரன் அதன் பின்னரும் ஆரதியிடம் வாக்குவாதத்தை தொடர்ந்துள்ளார். ஆரதி சேர்த்தலாவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு  வேலைக்கு செல்லும் சமயத்தில் வழிமறித்து, பைக்கில் இருந்து கீழே இறக்கிய ஷியாம்ஜி சந்திரன், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.