மாமனார் தலையில் அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மருமகன்... குடும்பத் தகராறில் விபரீதம்!

 

ஆரணியில் குடும்பத் தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசித்து வருபவர் ஜமால் பாஷா (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இதில் கடைசி மகளான மனிஷா (28) என்பவருக்கு, அதே ஊரை சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மன்சூர் அலிகானும் ஆரணியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

இந்த நிலையில், மனிஷாவின் தாய் சைதாணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதே ஊரில் இருப்பதால், மனிஷா தன் தாயைக் கவனித்துக்கொள்ள அடிக்கடி தாய் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இப்படி அடிக்கடி மனைவி தாய் வீட்டிற்குச் சென்று வருவது கணவர் மன்சூருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மனைவியிடம் இதுதொடர்பாக சண்டையிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான மனிஷா, தாய் வீட்டிற்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் , சைதாணியின் உடல் நிலை மோசமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஜமால் பாஷா தனது மகளிடம் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட அவர் தாயைக் காணச் சென்றுள்ளார். இதை அறிந்த மன்சூர், மனைவியுடன் சண்டையிட்டதோடு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதைக்கேட்டு விரக்தி அடைந்த மனிஷா கணவரிடம் கோபித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, மனிஷாவின் சகோதரர்கள் நேற்று மன்சூர் அலிகான் வீட்டுக்குச் சென்று சமாதானம் பேசி உள்ளனர். அதன் பின்னர் நேற்று 12 மணி அளவில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மன்சூர் அலிகான் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவி மனிஷாவை அழைத்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அம்மிக்கலை எடுத்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த மாமனார் ஜமால் பாஷா தலைமீது போட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த, ஜமால் பாஷாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மனிஷா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ஆரணி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மன்சூர் அலிகானை தேடி வந்தனர்.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜமால் பாஷா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மன்சூர் அலிகானை கைது செய்தனர். குடும்பத் தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.