ஆன்லைன் செயலி மூலம் கடன்.. திடீரென வந்த ஆபாச புகைப்படம்.. ஐடி இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!!
தர்மபுரி அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று நெருக்கடிக்கு ஆளான இளைஞர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து உள்ள பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்தவர் லிங்கேஷ். இவரது மகன் சூரியபிரகாஷ் (24). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி, ஆன் லைன் கேம்லிங், கிரிக்கெட் சூதாட்டங்களை சூர்யபிரகாஷ் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில், ஆன்லைன் கடன் செயலி கும்பல், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி வீட்டிற்கு வந்த சூரியபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 12-ம் தேதி விஷம் குடித்து விட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூரிய பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் சூரியபிரகாசின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.