இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் எரித்துக் கொலை.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம்!

 

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனை கொலை செய்து, தான் இறந்தது போல நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்தது. வீட்டிற்குள் உடல் கருகி இறந்த நிலையில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த நபர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, உடலில் தீ வைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. கொலை சம்பவத்தில் தொடர்புசெடைய சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் ஒரத்தி போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், இன்சூரன்ஸ் செய்து இருக்கிறார். இத்தொகையை, தான் உயிருடன் இருக்கும் பொழுதே பெற்று சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என சுரேஷ் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக மாஸ்டர் பிளான் போட்டு, தன் வயதுடைய நபரை, பல மாதங்களாக தேடி வந்துள்ளார். அப்போது, அயனாவரம் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபுவின் நினைவு சுரேஷ்க்கு வந்துள்ளது.

டில்லி பாபு, தற்போது எண்ணுார் அடுத்த ஏராணாவூர் பகுதியில் வசித்து வருவதை அறிந்து, அங்கு தனது கூட்டாளிகளான ஹரி கிருஷ்ணன் மற்றும் கீர்த்தி ராஜனுடன் சென்று இருக்கிறார். அவருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியில் சென்று வரலாம் என டில்லிபாபுவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

டில்லிபாபு, சுரேஷ், கீர்த்தி ராஜன், ஹரிகிருஷ்ணன் என நான்கு பேரும் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில் உள்ள குடிசை வீட்டிற்கு டில்லி பாபுவை அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து டில்லிபாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது, டில்லிபாபுவின் உடலை குடிசை வீட்டில் வைத்து, குடிசை வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

கொலை செய்து உடலை எரித்து விட்டு சுரேஷ் உட்பட மூன்று பேரும் அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இதனிடையே, குடிசை வீட்டில் எரிந்து கிடந்த நபர் சுரேஷ் என அனைவரையும் நம்ப வைத்து, அவரது குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டு, அயனாவரம் பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். சுரேஷ் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், டில்லிபாபுவின் அம்மா லீலாவதி என்பவர், நண்பர்களுடன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, தனது மகன் குறித்து தகவல் ஏதும் இல்லை எனக்கூறி எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு வழக்குப் பதிவு செய்து கிடப்பில் போடப்பட்டுள்ளதை அறிந்து, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில், மீண்டும் புகார் அளித்துள்ளார். அங்கும் விசாரணை செய்து, மகன் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த, சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் அவர்களுடன், வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக டில்லிபாபு கூறிவிட்டு சென்றதாக லீலாவதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில், சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோர் அரக்கோணம் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், இன்சூரன்ஸ் தொகையை பெற்று நண்பர்களான கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், சுரேஷ் 60 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டது தெரியவந்தது. இதற்காக ஒரே வயதுடைய நபரான டில்லி பாபுவை கொலை செய்து, குடிசை வீட்டில் வைத்து எரித்து, சுரேஷ் இறந்ததாக நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமானது. சுரேஷ், கீர்த்தி ராஜன், ஹரிகிருஷ்ணன் என மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக சுரேஷின் குடும்பத்தினர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளதால் பணம் பெற முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் கூற, சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்சூரன்ஸ் பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, நண்பனை கொலை செய்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.