காதல் திருமணம் செய்த தம்பி.. வரதட்சணை கேட்டு மருமகனின் அண்ணன் தொல்லை.. மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்!

 

வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த மருமகனின் சகோதரரை மாமனார் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மேல்கரை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு கனகராஜ், முத்துக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கனகராஜுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கனகராஜின் சகோதரரான முத்துக்குமார் கோவையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரை முத்துக்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்ணின் தந்தையான நாராயண பெருமாளிடம், முத்துக்குமாரின் சகோதரர் கனகராஜ் வரதட்சணையாக நகைகள் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 

பார்க்கும் இடமெல்லாம் மகளுக்கு எப்பொழுது நகைகள் போடுவாய் எனக் கேட்டு கனகராஜ் தகராறு செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாராயண பெருமாளின் வீட்டிற்கு சென்று கனகராஜ் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நாராயாண பெருமாள், கனகராஜை மண்வெட்டியால் அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கனராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த களக்காடு போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நாராயண பெருமாளை தேடி வருகின்றனர்.