மனைவி, மகள் கழுத்தை அறுத்துக்கொலை செய்த தந்தை.. கரூரில் பரபரப்பு
கரூர் அருகே மனைவி மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெங்கமேடு வி.வி.ஜி. நகர் கலைஞர் சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்வகணேஷ். இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கல்பனா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வெகுநேரமாகியும், இவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் வீட்டின் ஜன்னல் வழியாக பொதுமக்கள் எட்டி பார்த்தபோது கல்பனாவும், குழந்தை சாரதிபாலாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கல்பனா, சாரதிபாலா இருவரும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் செல்வகணேஷ் கொசு மருந்தை குடித்து மயங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் செல்வகணேசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக செல்வகணேசுக்கும், கல்பனாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகணேஷ் கத்தியால் கல்பனாவையும், மகள் சாரதிபாலாவையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.