குடும்ப தகராறு.. நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை சுட்ட கொடூர மகன்.! வேதாரண்யத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

 

வேதாரண்யம் அருகே, நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை மகன் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). விவசாயியான இவருக்கு கருணாநிதி (46) என்ற மகன் உள்ளார். உப்பளதொழிலாளியான இவருக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கருணாநிதியை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் கருணாநிதி தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி நேற்று பன்னீர்செல்வத்தை துப்பாக்கியால் சுட்டார். அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய சிறிய அளவிலான ஈயக் குண்டு பன்னீர்செல்வம் மீது படாமல் அருகில் உள்ள தண்ணீர்டிரம்மில் பட் டது. இதனால் பன்னீர்செல்வம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து பன்னீர்செல்வம் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வேம்பதேவன்காடு, புளியங்குளத்தில் கிடந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

இந்த துப்பாக்கிக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? கள்ளத்துப்பாக்கியா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கருணாநிதி மீது பறவை, மான் வேட்டை நடத்தியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தகராறில் தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.