என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. திருவள்ளூர் அருகே சோகம்!
திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது மகள் ஆஷா (20). இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் இரவு 11 மணி வரை படித்துவிட்டு அதன் பின்னர் தூங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் 11 மணி வரை படித்துவிட்டு அறையில் உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு கல்லூரிக்கு செல்வதற்கு எழுந்து வரவில்லை.
இதையடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவரது தந்தை மூர்த்தி கதவை தட்டியபோது நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மூர்த்தி ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆஷா மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.