பாரில் வாக்குவாதம்.. மருத்துவர் குத்திக்கொலை.. சென்னையில் சிக்கிய கொலையாளி..!

 

கன்னியாகுமரியில் மருத்துவரை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மதுபார் ஊழியரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கடந்த 31-ம் தேதி மாலை, கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டரான சுனில் (45) என்பவர் தனது நண்பருடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த பாரில் பணியில் இருந்த எஸ்.டி மங்காடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (38) என்பவர் டாக்டர் சுனில் ஆர்டர் செய்த உணவுப் பொருட்களை தாமதமாக எடுத்து வந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில், பார் ஊழியர் சங்கருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னிலை இழந்த சங்கர் கடையில் இருந்த கத்தியால் டாக்டர் சுனிலின் அடிவயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் குடல் வெளியே தள்ளியபடி சுனில் உயிருக்கு போராடியபடி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய சங்கரை தேடி வந்தனர். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் 2 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொலையாளி சங்கர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை விரைந்த போலீசார், அங்கு வைத்து சங்கரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் களியக்காவிளை அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுனில் திருமணம் ஆகாதவர். ஏற்கனவே தாய், தந்தையை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.