யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி.. கிட்னாப்பில் இறங்கிய யூடியூப் பிரபலம்.. தர்மபுரியில் பரபரப்பு!

 

தர்மபுரியில் யூடியூப் சேனல் நடத்துவதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (31). இவர் தர்மபுரி நகரில் அலுவலகம் அமைத்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது அலுவலகத்துக்கு வந்த 12 பேர் அடங்கிய கும்பல், தங்களின் யூடியூப் சேனலின் பார்வையாளர்களை ஆனந்தகுமார் போலியாக அதிகப்படுத்தியதாகக் கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், ஆனந்தகுமாரின் அலுவலகத்தில் இருந்த 70 செல்போன், 5 மடிக் கணினிகளையும் அவர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனந்தகுமாரின் அலுவலகத்தில் பணியாற்றும் பிரேம் குமார் என்பவர் இந்த தகவலை தர்மபுரி நகர காவல் நிலையத்துக்கு தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் தர்மபுரி டிஎஸ்பி செந்தில் குமார் வழிகாட்டுதலில் தர்மபுரி நகரக் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ஆனந்தகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டியில் இருப்பது தெரியவந்தது.

எனவே, அவர்களைப் பிடித்து விசாரித்த போது, பழைய தர்மபுரி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (38) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும், மற்றொரு யூடியூபரான ஆனந்தகுமார் பதிவிட்ட சில தவறான புள்ளி விவரங்களால் சின்னசாமியின் யூடியூப் சேனலின் வருவாய் பாதிப்படைந்த ஆத்திரத்தில் ஆனந்தகுமாரை கடத்திச் சென்றதாகவும் தெரியவந்தது.

எனவே, கடத்தலில் ஈடுபட்ட சின்னசாமி (38), அதகப்பாடி சீராளன் (30), கோடியூர் சுந்தரம் (30), சுரேஷ் (39), ரவி (39), ஏ.ஜெட்டி அள்ளி முருகன் (26), ராமு (30), மல்லிக்குட்டை சதீஷ் (35), பெரியசாமி (27), கிருஷ்ணாபுரம் சந்திரன் (29), தருமபுரி தினேஷ் குமார் (23), சோளப்பாடி மணி (25) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 6 இருசக்கர வாகனங்கள், ஆனந்தகுமாரின் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 70 செல்போன்கள், 5 மடிக்கணினிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். யூடியூப் சேனலின் வருவாய் பாதிப்படைந்ததால் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.