மதுரையில் 5-ம் வகுப்பு மாணவி பலி.. பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

 

மதுரையில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் கூடல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி தனது வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறி அவரை வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல்புதூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமி குளிக்க சென்ற போது குளியலறையில் மயங்கி விழுந்து இறந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதன் பின்னர் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியோடு சிறுமியின் வீட்டுக்கு சென்று தடயங்களை சேகரித்து போது, அவரது ஆடைகள் கீழே கிடந்துள்ளதை அறிந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், சிறுமியை யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்து, கொல்ல முயன்றிருக்கலாம் என சந்தேகித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா ? என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.