மதுரையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை.. சம்பளம் தராததால் ஊழியர்கள் வெறிச்செயல்!

 

மதுரையில் பாஜக நிர்வாகியிடம் வேலை பார்த்து வந்த ஊழியர்களே அவரை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர், மதுரை அண்ணாநகரில் வசித்து வந்தார். மதுரை மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த சக்திவேல், அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் மற்றும் குடோன் வைத்து அரிசி வியாபாரமும் செய்து வந்தார். இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில்  உள்ள அவருடைய குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சக்திவேலை பின்தொடர்ந்து வந்தவர்கள் அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டனர். தன்னை கொலை செய்ய வந்திருப்பதை அறிந்து கொண்ட சக்திவேல், அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். தொடர்ந்து அவரை விரட்டிச் சென்ற கும்பல் சக்திவேலை சரமாரியாக வெட்ட, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் உயிரிழந்ததை உறுதி செய்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் சக்திவேல் உடல் கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சக்திவேலின் அரிசி குடோனில் வேலை செய்த ஊழியர்களே கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

ரேசன் அரிசியை கடத்தி பாலிஸ் செய்து விற்பனை செய்துள்ளார் சக்திவேல். இவரது அரிசி குடோனில் ரஞ்சித், மருது என இருவர் ஊழியர்களாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதமாக ஊதியம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. வேலைக்கான ஊதியத்தை கொடுக்குமாறு இருவரும் சக்திவேலிடம் பலமுறை கேட்டும், அவர் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் ஊதியம் கேட்டு சக்திவேலின் குடோனுக்கு சென்றபோது, அங்கே வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், மருது இருவரும் சேர்ந்து சக்திவேலை வெட்டி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், ரஞ்சித், மருது இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.