ஆம்லெட் கேட்டு ரகளை.. தடுக்க வந்த வாலிபரின் முகத்தை சிதைத்து கொலை.. அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்!
அறந்தாங்கி அருகே ஆம்லெட்டு கேட்டு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் ஜான் (37). இவர் பேக்கரி ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வல்லவாரி கடைவீதியில் உள்ள மீனாட்சி உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது ஜான் ஆம்லெட்டு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, ஜான் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜான் தனது சகோதரர் டேவிட் (34) உள்ளிட்ட 7 பேரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு மீண்டும் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் உணவகத்தில் இருந்தவர்களை பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவ்வழியாக சென்ற பிரபு (24) உள்ளிட்டோர் சண்டையை தடுக்கச் சென்றுள்ளனர். அதனையடுத்து சண்டை திசைமாறி தடுக்கச் சென்ற பிரபுவை ஜான், டேவிட் கும்பல் கல்லால் தாக்கி முகத்தை சிதைத்துள்ளனர். மேலும் நெஞ்சு பகுதியில் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிரபு ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார்.
மயங்கிய பிரபுவை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அதனையடுத்து பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.