புறக்காவல் நிலையம் முன் வாலிபர் சரமாராயாக வெட்டி படுகொலை.. நெல்லையில் பயங்கரம்!

 

நெல்லையில் புறக்காவல் நிலையம் முன் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தது.

அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தியாகுவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து உடனடியாக நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார், சந்தியாகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தியாகுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இதன் காரணமாக சந்தியாகு வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.