கல்குவாரியில் திடீரென வெடித்த வெடி.. 2 பேர் பரிதாப பலி.. திண்டுக்கல் அருகே பரபரப்பு!
வேடசந்தூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறை உடைக்க வைத்த வெடி வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சந்தரபுரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாறைகளை உடைப்பதற்காக வெடிவைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து கற்க்கள் சரிந்து வெடியின் மீது விழுந்ததால் திடீரென அந்த வெடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் (60), சுந்தரபுரி கிராமத்தைச் சேர்ந்த வேலு (55) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சுந்தரபுரி கிராமத்தைச் சேர்ந்த கோபால், மரியப்பன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அணுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.