கல்லூரி மாணவி கழுத்தை கரகரவென அறுத்த முறைமாமன்.. பெண் தர மறுத்ததால் விபரீதம்!

 

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து தாய்மாமன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்து உள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35). திருப்பத்தூரை அடுத்த சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த இவர் புகைப்பட கலைஞர் மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார்.

மாணவி ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்ததால் ஜீவிதாவை, சரண்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க மாணவியின் தாய் ஜெயப்பிரதா மறுத்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக சரண்ராஜ், ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார். ஆனால் ஜீவிதா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் நேற்று விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார், ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து சரண்ராஜை வலைவீசி தேடி வந்த நிலையில், நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து சரண்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.