குளத்தில் மிதந்த 2 வயது குழந்தை.. தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த சதியா..? போலீஸ் விசாரணை!
புதுக்கோட்டையில் 2 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் சோட்டு (எ) இசைத்தமிழன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜோதிகாவுக்கு ஃபேஸ்புக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காமராஜ் நகரை சேர்ந்த பரத் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பரத் கடலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் பணியாற்றி வருகிறார். இவர்களிடையே ஏற்பட்ட நட்பு கடந்த 3 மாதங்களுக்கு முன் காதலாக மலர்ந்தது. ஃபேஸ்புக்கை தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு வாட்ஸ் ஆப்பில் பேசி காதலலை தொடர்ந்து வந்தனர்.
அப்போது ஜோதிகா தனது திருமணத்தை மறைத்து பரத்திடம் இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பிய பரத் கடந்த மாதம் பெங்களூரு சென்று ஜோதிகாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் இருந்த குழந்தை குறித்து கேட்டபோது, அது தனது அக்கா குழந்தை என்றும், அவர் இறந்து விட்டதால் தன்னுடன் இருப்பதாகவும், விரைவில் குழந்தையை தனது தாய் வீட்டில் விட்டு விடுவதாகவும் பரத்திடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய பரத், குழந்தையுடன் ஜோதிகாவை இலுப்பூர் அழைத்து வந்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஜோதிகாவுடன் இருந்த குழந்தையை கடந்த 13-ம் தேதி திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பரத் தம்பி ஜெயராஜ் (18) விளையாடுவதற்கு தூக்கி சென்றுவிட்டாதாக கூறியுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினர் இருவரையும் தேடியபோது வீட்டின் அருகே இருந்த பொன்குளத்தில் இறந்த நிலையில் குழந்தை மிதந்தது.
தகவல் அறிந்து வந்த இலுப்பூர் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் ஜோதிகா, பரத் மற்றும் அவரது தம்பி ஜெயராஜ் ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதில் ஜோதிகா குறித்த அனைத்து விவரங்களும் தெரிய வந்தது. அதனடிப்படையில் முதல் கணவர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் நேற்று இலுப்பூர் வரவழைக்கப்பட்டார்.
வெங்கடேஷ் மற்றும் பரத், ஜோதிகா, ஜெயராஜ் ஆகியோரிடம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை எப்படி இறந்தது, குளத்தில் வீசி கொல்லப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.