துருவ நட்சத்திரத்தில் சூப்பர் ஸ்டார்.. கடைசில ஒரு ட்விஸ்ட்!

 

நடிகர் ரஜினிகாந்திடம் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர், 2001-ல் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர்.

இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பத்து தல, கருமேகங்கள் கலைகின்றன, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதனிடையே விக்ரம் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த சூழல் இப்படி இருக்க படத்தை சுற்றியிருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அதனையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை முழுவதும் பார்த்த விக்ரமுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் நவம்பர் 24-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியிருப்பதன் காரணமாக கண்டிப்பாக படம் ரசிகர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கௌதம் மேனன் ஈடுபட்டிருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன். ஆனால் அவரோ ஸ்பை த்ரில்லர் ஜானர் கதைகளை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்று கூறி விலகிவிட்டார். அதன் பிறகு ரஜினிகாந்த்திடமும் இந்தப் படத்தின் கதையை சொன்னேன். அவரிடம் கதை சொல்லும்போது அவரது வயது, ஸ்டைலுக்கு தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் அவரால் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு விக்ரமிடம் சொன்னேன். அவர் ஒத்துக்கொண்டார்” என்றார்.