இளைஞரை சுட்டு கொன்ற விஜய் பட வில்லன் நடிகர்.. உதவியாளர் உள்பட 3 பேர் கைது!

 

உத்தரபிரதேசத்தில் பிரபல நடிகர் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1998-ல் வெளியான ‘ஷாம் கன்ஷாம்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பூபிந்தர் சிங். 2001-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான ‘வில்லன்’ படத்திலும், சரத்குமார் நடிப்பில் வெளியான ‘திவான்’ படத்திலும் நடித்திருந்தார். இவர், இந்தி டிவி தொடர்களில் மூலம் பிரபலமானார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் பகுதியில் பண்ணை தோட்டம் உள்ளது. இதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், புபேந்தர் சிங் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி, அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றார்.

இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த நடிகர் புபேந்தர், தன் உதவியாளர்களுடன் சேர்ந்து, குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார். மேலும், புபேந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டதில், குர்தீப் சிங்கின் மகன் கோவிந்த் (22), பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் குர்தீப், அவரது மற்றொரு மகன் அம்ரிக், மனைவி பீரா பாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக நடிகர் புபேந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜியான் சிங், ஜீவன் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.