விஜய் சேதுபதியின் 50வது படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்!

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘மகாராஜா’ திரைப்படம் இம்மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகியுள்ள ‘மகாராஜா’ படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடைக்காரராக நடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.