‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினி ரசிகர்களுக்கு செம செய்தி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வேட்டையன் படம் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக, அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.