பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்.. திரையுலகில் மேலும் ஒரு சோகம்!

 

பழம்பெரும் நடிகை லீலாவதி வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 85

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லீலாவதி. இவர் ஒரு கன்னட திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1958-ல் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் இவரது முதல் படம் ‘மாங்கல்ய யோகா’. பக்த பிரகலாதா, ராஜா மலையசிம்மன், அப்பா ஆ குடுகி, தர்ம விஜயா, தஸாவதாரா, ராணி ஹொன்னம்மா, கந்த்ரேடு நோடு போன்றவை இவர் நடித்த துவக்க கால கன்னடப் படங்கள். தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, `அவர்கள்’, ‘நான் அவனில்லை’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், என்.டி.ராமாராவ், ம.கோ.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமலஹாசன், சிரஞ்சீவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து துறையில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் 400 க்கும் மேலாக கன்னடத்தில் நடித்து இருக்கிறார். நாகரஹாவு, அவர்கள் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்களால் நினைவு கூறப்படுகிறது. லீலாவதிக்கு ஃபிலிம்பேர் விருது கன்னட மாநில அரசின் விருது 1999-ல் ராஜ்குமார் விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கின்றன.

நடிகை லீலாவதியின் மகன் வினோத் ராஜூவும் ஒரு நடிகராவார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி என மலைப்பகுதியில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக பல ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் படுத்தப்படுகையாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அவரின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகை லீலாவதியின் மறைவு திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.