பிரபல நடிகர் துவாரகீஷ் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

1964-ல் வெளியான ‘வீர சங்கல்பா’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் துவாரகீஷ். நடிகராக திரையுலகிற்கு வந்த அவர் பின்னர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். மறைந்த டாக்டர் ராஜ்குமாரை வைத்து த்வாரகிஷ் தயாரித்து, நடித்த மேயர் முத்தண்ணா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களை தயாரித்த இவர், 1985-ம் ஆண்டு வெளியான ‘நீ பரேடா காதம்பரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த ‘அடுத்த வாரிசு’ படத்தை தயாரித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை என்கிற படத்தை, இயக்கி தயாரித்துள்ளார். அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான ‘லவ் டூடே’ படத்தை கன்னடத்தில் இயக்கி தயாரித்துள்ளார். கன்னடத் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், வயது மூப்பு தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டில் துவாரகீஷ் இறந்ததாக அவரது மகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பெங்களூரு ரவீந்திர கலாக்ஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

துவாரகிஷின் மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர்களின் ஒருவரான இவரது மறைவு ரஜினிகாந்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.