இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் - லாவண்யா திருமணம்.. குவியும் வாழ்த்துகள்!

 

நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமணம் நேற்று இத்தாலியில் இந்திய முறைப்படி நடைபெற்றுள்ளது.

2012-ல் வெளியான ‘அந்தலா ரக்சாசி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன்பின், தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘பிரம்மன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாயவன் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது தணல் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே, இவருக்கும் தெலுங்கு இளம் கதாநாயகன் வருண் தேஜூம் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் சேர்ந்து நடித்த இருந்தனர். அப்போது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் கடந்த ஜுன் மாதம் நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே, தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் வருண் தேஜ்ஜின் உறவினர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோரும் சில தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

அவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படம் பல ஹார்ட்டின்களைக் குவித்து வருகிறது. பலரும் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்குத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.